Wednesday, December 26, 2012

மதங்களுக்கெதிரான சாடல்கள்...

(பகுதி - 2)


     ஒரு விடயத்தைப் பற்றி விமர்சிப்பதாயின் அப்பொருள் பற்றிய சரியான அறிவும் தெளிவும்  அவசியமானதொன்றாகும். ஆனால் பேசு பொருளான மத விமர்சகர்கள் தாம் விமர்சிக்கும் மதங்களை மட்டுமல்ல தாம் பின்பற்றுகின்ற மதத்தைப் பற்றிக்கூட ஒரு அகரமும் தெரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். எந்த மதத்திலும் இன்னுமோர் மதத்தைப் பற்றி கீழ்த்தரமாய் விமர்சிக்கச் சொல்லவில்லை. தன் மதத்தை ஆராதிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு மற்ற மதங்களை இழிவு படுத்த முயல்பவன் செயலால் அவன் மதமே இழிவு படுத்தப்படுகிறது.

     பகுத்தறிவு கொண்டவனாய் மார்தட்டிக்கொண்டு பக்கம் பக்கமாக விமர்சனமும் கருத்துக்களும் எழுதுபவர்களின் எழுத்தாக்கங்களைப் பார்க்கையில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் எவ்வளவழவாக சம்பந்தத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள் என்பதைப் எண்ணி மெச்சத்தோன்றுகிறது. உதாரணமாக குறிப்பிட்ட சிலரின் பிள்ளைப் பேறுகளின் விகிதத்தினைக் கொண்டு அவர்கள் சார்ந்த மதமே அவர்களின் இனவிருத்தியை அதிகரிக்கப் போதித்து சனத்தொகை அதிகரிப்பின் மூலம் நாடு பிடிக்கப் போவதாய் ஒரு குழு பிரச்சாரம் செய்கிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களில் தேவையற்ற கருக்கலைப்புக்கள்  தடையென்றே ["வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக்(கருவிலே கொலை செய்யாதீர்கள், உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உணவளிப்பவன் இறைவனே" எனக்கூறப்பட்டுள்ளனவே தவிர இனப்பெருக்கத்திற்கும் நாடு பிடிப்பதற்கும் சமயரீதியில் என்ன சம்பந்தம் இருப்பதாகக் இவர்கள் கண்டார்கள் என்பது புரியவில்லை. 

     மற்றுமோர் வினோதப் பிரச்சாரம், சந்தையிலே மிக முக்கியமான ஆடை விற்பனை நிலையமொன்று தன் வியாபார விருத்திக்காக சில வகை இனிப்புகளை வழங்கினர். அது அவர்களது வியாபார நுட்பம் ஆனால் சில மேதாவிகள் அதற்கும் மதச்சாயம் பூசி அந்நிறுவன நிருவாகிகள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் மாற்று மத இனவிருத்தியைத் தடுப்பதற்காக சில கர்ப்பத்தடை மருந்துகளை அவ் இனிப்புக்களில் கலந்து விநியோகிப்பதாக விசம பிரச்சாரத்தைச்  செய்து மக்கள் மத்தியில் விரோதத்தை வளர்க்கின்றனர். ஆனால் அந்நிறுவனத்தில் அனைத்து மத மக்களும் பொருட்கள் கொள்வனவு செய்கின்றனர் அனைவருக்குமே அவ் இனிப்புக்கள் வழங்கப்படுகின்றன அவர்கள் எந்த மதப் பாகுபாடும் பார்ப்பதில்லை அது சாத்தியமுமற்றதாகும்.

                                                                                                          பகுதி - 03 >>>>