Thursday, February 28, 2013

ஊரோடி..... 

(01)

 

கணக்காய்விற்கான அனுராதபுரம், வவுனியாப் பயணம்.

Audit inspection trip to Anurathapura & Vavuniya
பயணக்கட்டுரை.


     எமது பயணம் 11.02.2013 திங்கட் கிழமை மதியம் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி ஆரம்பமானது. எமது பயணக் குழுவிலே என்னுடன் Wijeyapala, Shehan, Anura மற்றும் Isharaka ஆகியோர் இணைந்திருந்தனர். எமது அமைச்சிலிருந்து எமது பயணம் ஆரம்பமானது. அடிக்கடி பயணங்கள் செய்வதால் ஒரு வித சலிப்பு ஏற்பட்டிருந்தாலும் புதிய, புதிய இடங்களைப் பார்வையிடுதல் மேலிருந்த காதலால் ஒரு ஆர்வமும் மேலிட்டிருந்தது.

     அனுராதபுரத்திற்கு புத்தளம் ஊடாகச் செல்வதற்கு முடிவு செய்யப்பட்டு நீர்கொழும்பினூடாக புத்தளம் நோக்கி அமைந்தது எமது பயணத்தின் முதற்கட்டம். நீர்கொழும்புவரை வாகன நெரிசல் மிக அதிகமாகக் காணப்பட்ட போதிலும் நீர்கொழும்பு தாண்டிச் செல்லச் செல்லச் வாகன நெரிசல் குறைந்து ஒரு அமைதியான நீர் நிலையில் செல்லும் படகாய் எமது வாகனம் பயணம் செய்தது. வழுக்கிச் செல்லும் கண்ணாடிபோலும், மிக அகன்றதாயும் பாதைகள் இருந்ததால் பயணத்தினை மிக விரைவாகவும், சொகுசாகவும் மேற்கொள்ளக்கூடிய நிலை காணப்பட்டது. பிற்பகல் இரண்டு முப்பது மணியளவில் ஓர் சிறு இடைப்போசணத்திற்காக சிலாபம் நகரில் நிறுத்தினோம்.

     அதன் பின்னர் எமது பயணம் புத்தளம் ஊடாக அனுராதபுரம் நோக்கி மிக வேகமாக நகர்ந்தது, புத்தளம் நகரைக் கடந்த பின்னர் புதிதாக 2012 "தேசத்திற்கு மகுடம்" நிகழ்சிக்காக அமைக்கப்பட்ட பாதையில் எமது பயணம் தொடர்ந்தது, பாதையின் இரு மருங்கிலும் கண்ணுக்குக் குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் கண்ணுக்கு விருந்து படைத்தன.

     பிற்பகல் நான்கு மணியளவில் அனுராதபுரம் நகரினைச் சென்றடைந்தோம். அதன் பின்னர் எமது அமைச்சின் சுற்றுலா விடுதியை அடைந்து நீராடி, இரவுணவினையும் முடித்துக்கொண்டு பயணக்களைப்பு மேலிட விரைவிலேயே உறங்கச்சென்றோம்.

     அதனைத் தொடர்ந்த வாரநாட்கள் அனுராதபுர மாவட்டச் செயலக கணக்காய்விலே கழிந்தன. பின்னரான வார இறுதி நாட்களில் அனுராதபுர நகரின் புராதன தலங்களைப் பார்வையிடச் சென்றோம்.


Larg 'Moon Stone' - Anurathapura.
IHLAS IM, wijepala(HD), shehan

    பின்னர் திங்கட் கிழமை காலை வவுனியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டோம், காலை ஒன்பது மணியளவில் வவுனியா மாவட்டச் செயலகத்தை அடைந்து கணக்காய்வினைத் தொடர்ந்தோம். தொடர்ச்சியாக ஒரு வாரம் வவுனியா மாவட்டச் செயலகத்தில் கணக்காய்வில் ஈடுபட்டோம். நாங்கள் வவுனியாவில் தங்கியிருந்த ஒரு வாரமும் மழை தொடர்ச்சியாகப் பொழிந்த வண்ணமே இருந்தது.

     வெள்ளிக்கிழமை இரண்டு மணியளவில் எமது வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கொழும்பு நகர் நோக்கிப் புறப்பட்டோம். வரும் வழியில் இலங்கைக்கு பெளத்த மதம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடமான "மிஹிந்தலைக் குன்றுக்கும்" சென்று பார்வையிட்டோம்.



Anciant water tank - Anurathapura
IHLAS IM, Anura, shehan
Anciance Building - Anurathapura
IHLAS IM, shehan
















Anciant Building - Mihintale
IHLAS IM, Anura, shehan
First step on 'Mihinthale Rock'
IHLAS IM, Anura, shehan














IHLAS IM, Anura, Isharaka
Climping on top of the Mihintale Rock
IHLAS IM













     அதன் பின்னர் எமது பயணத்தினைத் தொடர்ந்து இரவு பத்து மணியளவில் கொழும்பு நகரை வந்தடைந்தோம்.

Tuesday, January 8, 2013

ஆலமரமும், பறவைகளும்....

உருவகக் கதை.

     பன்னெடுங்காலமாக ஓர் ஆலமரம் மிகப் பசுமையாய் வளர்ந்து, பரந்து மிகச் செழிப்போடும், பொலிப்போடும் நிலைத்திருந்தது. அம்மரம் பல வகைப் பறவைகளுக்குப் புகலிடமாய்க் காணப்பட்டது. அம்மரத்திலே பல வகைப் பறவைகள் வாழ்ந்த போதிலும் அவற்றில் மிகப் பிரதானமானவை பருந்துகளும், கிளிகளும், சிட்டுக்குருவிகளுமாகும். இவையனைத்தும் ஒரே குடும்பமாய் ஒற்றுமையாய் அம்மரத்தில் வாழ்ந்து வந்தன.

     இவ்வாறு இனிதே சென்று கொண்டிருந்த அப்பறவைகளின் வாழ்க்கையில் பெரியதோர் ஆபத்தை எதிர்நோக்க வேண்டி வந்தது, அதாவது அப்பறவைகள் வாழ்ந்த ஆலமரத்தின் செழிப்பையும் பொழிப்பையும் பார்த்த வேறு மரங்களில் வாழ்ந்த வேறு பறவைகள் இவ்வால மரத்தின் வளங்களைச் சுவைக்க ஆசை கொண்டன. அதனால் காலத்துக்குக் காலம் ஆந்தைகள், வெளவால்கள், பிணந்தின்னிக் கழுகள் என்பவற்றின் வருகையும் அதன் மூலம் பெரும் பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது. இறுதியாக வந்த பிணந்தின்னிக் கழுகுகள்  பலத்தில் பெரியவையாக இருந்த படியினால் பலகாலம் அந்த ஆலமரத்திலேயே தங்கிவிட்டிருந்தன.

     அந்தக் கழுகள் ஆலமரத்தில் வாழ்ந்த காலம், அந்த மரத்திலேயே நிரந்தரமாய் வாழ்ந்துவந்த பறவைகளுக்கு மிகுந்த போராட்டக் காலமாய் அமைந்திருந்தது, பலத்தால் பெரியவையான அந்தக் கழுகுகள் மற்றைய பறவைகளை அடக்கியாள ஆரம்பித்தன. கொஞ்சக்காலம் எதிர்த்த மற்றைய பறவைகள் பின்னர் அந்த ஆளுகைக்குப் பழகிப்போயின. பின்னர் குழுக்களாகச் சேர்ந்து எதிர்க்கத் துவங்கின. இவற்றின் ஒட்டுமொத்த எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பிணந்தின்னிக் கழுகுகள் அம்மரத்தை விட்டுப் பறந்துவிட்டன. கழுகுகள் செல்லும் போது மரத்திலேயே நிலையாய் இருந்த மூவினப் பறவைகளுக்கிடையிலும் பிரிவினையைத் தோற்றுவித்தே சென்றன.

     கழுகுகள் மரத்தை விட்டுச் சென்றதும் பலத்திலும், எண்ணிக்கையிலும் உயர்வாகக் காணப்பட்ட பருந்துகள் மரத்தை ஆள முடிவெடுத்துக் கொண்டன, ஆனாலும் அனைத்துப் பறவைகளின் விருப்பங்களுக்கிசைவான ஆட்சியே நடத்தப்படுவதாய்க் கூறிக்கொண்டன. இவ்வாறு இந்த ஆட்சி பறவைகளுக்கு இன்ப, துன்பங்களை மாறி மாறிக் கொடுத்தபடி நடந்துகொண்டிருந்த வேளை பருந்துகளுக்கும் கிளிகளுக்கும் சிறிய சிறிய முரண்பாடுகள் தோன்றி பெரியதோர் எதிர்ப்புணர்வாய்த் தோன்றவாரம்பித்தது. இறுதியாய்க் கிளிகளில் ஒரு குழு மரத்தின் ஒரு பகுதியைத் தாங்களே ஆண்டுகொள்ளவும் அப்பகுதியில் கிளிகள் மட்டுமே வசிக்க வேண்டுமென்ற முடிவையும் எடுத்துக்கொண்டது. இதை ஏற்றுக்கொள்ளாத ஆளும் பருந்துகளுக்கும், கிளிகளுக்கும் இடையில் பெரும் போராட்டம் வெடித்தது.

     போராட்டமென்றால் சாதாரண போராட்டமல்ல பருந்துகளும், கிளிகளும் மாறி மாறி உயிர்களை எடுப்பதிலேயே குறியாய் இருந்தன இரு தரப்பிலும் பல்லாயிரம் உயிர்கள் மடிந்தன. யார் பக்கம் நியாயம் என்பதெல்லாம் பார்க்கப்படவில்லை தத்தமது அதிகாரங்களையும் பலத்தையும் நிலை நிறுத்திக்காட்ட பாரிய போராட்டம் நிகழ்ந்தது. இதில் பரிதாபம் யாதெனில் இவை எதிலுமே சம்பத்தப்படாத சிட்டுக்குருவிகள் மத்தளத்தைப் போல் இரு பக்கமும் அடிவாங்கியதுதான். இந்தப் போராட்டத்தை வெறுத்த பல கிளிகளும் பருந்துகளும் இருந்த போதிலும் அவற்றாலும் எதுவுமே செய்ய முடியவில்லை. இறுதியாய் ஒரு சுபதினத்தில் கிளிகள் செறிவாய் வாழ்ந்த பிரதேசத்தில் குடியிருந்த சிட்டுக்குருவிகள் பலவந்தமாய் குடிபெயரச் செய்யப்பட்டன.

     மிக நீண்ட காலப் போராட்டத்தின் பின்னர் பலத்தாலும்,  ஆட்சி அதிகாரத்தாலும் பலமாயிருந்த பருந்துகளால் கிளிகள் தோற்கடிக்கப்பட்டு போராட்டம் அடக்கப்பட்டது. இருந்தாலும் இப்போராட்ட காலத்தில் மரத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டு மரம் பலமிழந்தும், வலுவிழந்தும் போனது. போராட்டம் அடக்கப்பட்டபின் கிளிகள் வாய்மூடி மௌனிகளாக்கப்பட்டன, எது நடந்தாலும் எதிர்த்துக் கருத்திட முடியா நிலையிலே கிளிகள் வாழப்பழகிக் கொண்டன.

     இப்படியே சிறிது காலம் சுமுகமாய்ச் சென்றுகொண்டிருந்தது, இக்காலப்பகுதில் மரம் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது, இப்படியே நல்லபடியாகப் பொழுதுகள் சென்றுகொண்டிருந்த வேளையில் சாதுவான சிட்டுக்குருவிகளின் செழிப்பான அமைதியான வாழ்வு பருந்துகளின் கண்களை உறுத்த ஆரம்பித்துவிட்டது. சிறிது சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட சிட்டுக்குருவிகளுக்கெதிரான வன்முறைகள் மிகப் பெரிதாகி விஸ்வரூபம் எடுக்கவாரம்பித்துள்ளன. இது இப்படியே தொடர்ந்தால் மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கலாம் என்ற அச்சம் பறவைகளுக்கிடையே தோன்றியுள்ளது.

     "மீண்டும் ஒரு போராட்டம்  வந்தால் மரத்தின் நிலை என்னவாகும், பறவைகள் வாழவே முடியா வகையில் அழிந்துபோகுமோ என்பதே என்கவலை, ஏனனில் அம்மரத்திலே வாழும் பறவைகளில் நானும் ஒருவன் என்பதாலே."
                                                                                                     

Thursday, January 3, 2013

மருதமுனைப் பாடசாலைகளை ஆண், பெண் பாடசாலைகளாகப் பிரித்தல்.

தலைப்புச் சம்பந்தமான என் கருத்துப் பதிவு.

பகுதி - 01

     மருதமுனைப் பாடசாலைகளினதும் பாடசாலை சமூகத்தினதும் மத்தியில் தற்போது எழுந்துள்ள மிகப் பெரிய பிரச்சனை ஆண், பெண் கலப்புப் பாடசாலைகளைத் தனிப்பால் பாடசாலைகளாக பிரிப்பதாகும்.

     பிரிப்பது சம்பந்தமாக பார்ப்பதற்கு முன், சேர்ந்திருப்பதால் என்ன பிரச்சனைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது என்பதைப் பார்ப்போம். ஆண், பெண் இருபாலாரும் இணைந்து ஒரே பாடசாலையில் கற்பதால் பல ஒழுக்க வீழ்ச்சிகள், கற்றலின் நாட்டமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பாடசாலைகள் இணைந்து காணப்படுவது மட்டுமா இந்தத் தவறுகளுக்கும், வீழ்ச்சிக்கும் காரணம்? இந்தப்பாடசலைகள் இத்தனை காலமாக இணைந்து காணப்படும் போதும் இத்தகைய பிரச்சினைகள் இருந்தனவா? குறிப்பிட்ட சில காலங்களாகவேதானே இந்தப்பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன, பாடசாலைகள் இணைந்திருந்த போதிலும் முன்னைய காலங்களில் வளமான மாணவர் சமூகங்கள் உருவாக்கப்படவில்லையா? எனவே தற்போதைய பிரச்சினைகளுக்கு என்ன காரணங்கள் என அறிய தற்போதைய சமூகத்தைச் சற்றுக் கூர்ந்து நோக்குவோம்.

      தற்போதுள்ள சமூக சூழலில் இளைஞர் சமூகம் ஒழுக்க விழுமியங்களுடன் வாழ்வதென்பது மிகுந்த கடினமானதொரு விடயமாகக் காணப்படுவதை நாம் அனைவரும் அறிந்தவர்களாகவே உள்ளோம். அதற்கு நிறையக் காரணங்களைக் கூறலாம், உதாரணமாக சினிமா, ஊடகங்கள், இணையம், மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கூறினாலும் இவற்றின் மூலம் நன்மைகள் பலவும் காணப்படலாம், ஆனால் பெற்றோர்களின் சரியான பரிபாலனம் இன்மை, மத ஒழுக்கங்கள் சரியான முறையில் போதிக்கப்பட்டு சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதைப் பார்ப்பதற்கு நேரமோ, மனமோ அற்ற நிலையிலே பெற்றொர் சமூகம் இருக்கிறது என்பதும் காரணம் என்பதே கவலைக்குரிய விடயம்.

     எமது சமூகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஒழுக்க நெறிகளை அனைவரும் கடைப்பிடித்தும் கடைப்பிடிக்க தூண்டியும் வந்தால் எத்தனையோ தவறுகளையும், பாவங்களையும் மாணவப் பராயத்தில் இருந்தே தடுத்து விடலாம். இதற்கு பெற்றொர், பாடசாலை ஆசிரியர்கள் காத்திரமான முடிவுகளை எடுத்தல் வேண்டும். அதற்கும் தற்போது மிகப்பெரிய தடை "மனித உரிமைகள் நிறுவனம்" என்ற பெயரில் உள்ளது. மனித உரிமைகள் நிறுவனத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் எனப்பார்ப்போமேயானால் இலங்கையில் நடைபெற்ற யுத்த  இறுதிக் காலகட்டத்திலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவும், மனித உரிமைகள், மாணவர் உரிமைகள் போன்ற கருத்துக்களும் பிரபல்யம் பெற்றது.

     எமது பாடசாலை வாழ்க்கைக் காலத்தில் செய்யும் தவறுகளுக்கு மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளோம், ஆனாலும் அதனை வீட்டிற்கு அறியத்தரவோ, பெற்றோர்களிடம் கூறவோ நாங்களே பயப்பட்டுள்ளோம், காரணம் ஆசிரியர்கள் காரணமில்லாமல் தண்டிக்கமாட்டார்கள், நீ எதோ தவறு செய்திருக்கிறாய் எனக்கூறி பெற்றோர்களும் தண்டிப்பார்கள் என்ற பயம். தவறுகளுக்கேற்ப கடுமையான தண்டனைகளும் கிடைக்கப்பெற்றுத்தான் உள்ளன. ஆனால் தற்போது ஒரு ஆசிரியர் தண்டித்தால் அல்ல, கண்டித்தாலே போதும் கண்டிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களால் அந்த ஆசிரியருக்கெதிரான போலிஸ் புகார்ப் பதிவும், மனித உரிமை ஆணைக்குழுவில் மாணவர் உரிமை மீறப்பட்டதாக வழக்கும் பதியப்படுகிறது. இவ்வாறு எத்தனையோ சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. இதை யாராவது பொய்யென மறுக்கின்றீர்களா?

     பெற்றோர்கள் தம் பக்கம் இருப்பதால் பயமற்று மாணவர்களும் தம் தவறுகளை அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர், பொலிஸ் முறைப்பாட்டிற்கும், வழக்கிற்கும் தலை கொடுக்க விரும்பாத ஆசிரியர்கள் விலகியே செல்ல நேரிடுகிறது. இது எமது இளம் மாணவர் சமுகத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடாகும். எங்களது பாடசாலை வாழ்க்கைக் காலத்தில் எங்களுக்குக் கிடைத்த ஆசிரியர்கள் எங்களது பாடசாலை நேர வாழ்க்கையை மட்டும் பாராது, பாடசாலை தவிர்ந்த நேரத்தையும் சேர்த்து எங்கள் முழு வாழ்க்கையையும் கவனித்து அதனை ஒழுக்கம் நிறைந்ததாகக் கொண்டுவர அரும்பாடு பட்டார்கள். இந்த நேரத்தில் எவ்வளவுதான் தண்டித்தாலும் எம்மையும் சமூகம் அங்கீகரிக்கும் மனிதர்களாக மாற்றிய ஆசிரியர்களில் சிலரான "கணிதப்பாட ஆசிரியர் திரு. சிராஜுதீன், பகுதித்தலைவர் திரு. சைபுதீன், சித்திரப்பாட ஆசிரியர் திரு. சிவானந்தராஜா ஆகியோருக்கும் இவர்களுக்கு மிகுந்த உறுதுணையாகவும், பேருதவியாகவும் இருந்த அதிபர் திரு. மீராமுகைதீன் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நித்திய சுகத்தையும், மறுமையில் ஈடேற்றத்தையும் கொடுப்பானாக. மேலே நான் குறிப்பிட்ட இவ்வாசிரியர்கள் எங்கள் வெளி வாழ்க்கையையும் கவனித்து தவறுகளுக்கு கடும் தண்டனை கொடுப்பவர்களாக இருந்தார்கள். இவர்களின் தண்டனைகளுக்குப் பயந்தே நாங்கள் பல தவறுகளை விட்டொழித்தோம். இவர்களுக்குப்  பெற்றோர் மத்தியிலும் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் இருந்தது, எந்தளவிற்கென்றால் மாணவர்கள் வீடுகளில் செய்யும் தவறுகளையும் பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் முறையிட்டு தண்டித்துத் திருத்தக் கூறுமளவிற்கு நம்பிக்கை பெற்றோர் மனதில் இருந்தது. ஆசிரியர் கண்டித்ததாய்ப் பிள்ளை கூறியவுடன் எதுவுமே விசாரிக்காமல் போலிஸ் நிலையம் செல்லும் இன்றைய பெற்றோர் சமூகத்திடம் இந்த நம்பிக்கையை எதிர்பார்க்கலாமா?, இல்லை தண்டனைகளுக்குப் பயந்தாவது தவறு செய்யாதிருக்கும் மாணவர் சமூகத்தைத் தான் எதிர்பார்க்கலாமா?. மேய்ப்பாளனிடம் கம்பில்லாவிட்டால் மந்தைகள் கூட அவனை மதியா. 

     சில ஆசிரியர்கள் "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும்" என்ற முதுமொழிக்கு ஏற்றாற்போல் மாணவர்களின் கல்வி, ஒழுக்க வழர்ச்சிக்காய்ப் பாடுபடுபவர்களாகவும், சில ஆசிரியர்கள் கல்வி ஊட்டலை மட்டுமே கருத்திற்க் கொண்டும், இன்னும் சிலர் சம்பளம் கிடைத்தால் மட்டும் போதும் என்ற ஏனோ தானோப் போக்கிலும் இருப்பதைக் காணக்கூடியதாய் இருக்கிறது, ஆசிரியர்கள் தமது வேலை ஒரு சேவை என்பதைக் கருத்திற்கொண்டு மாணவர்களின் வாழ்வியல் ஒழுக்கத்தை நெறிப்படுத்துவதில் கவனத்தை அதிகரிக்கச் செய்தாலும் பல தவறுகள் நடப்பதை முளையிலேயே தடுத்து விடலாம். """'ஒரு வைத்தியன் விடும் தவறு ஒரு உயிரைக் கொன்றுவிடும், ஒரு ஆசிரியன் விடும் தவறு ஒரு தலைமுறையையே கொன்றுவிடும்.' என்றாலும் ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர்களின் பக்கத்துணை மிக மிக முக்கியமானதாகும்.

                                                                                               பகுதி - 02 >>>>

மருதமுனைப் பாடசாலைகளை ஆண், பெண் பாடசாலைகளாகப் பிரித்தல்.

தலைப்பு சம்பந்தமான என் கருத்துப் பதிவு.

பகுதி - 02

     சரி, நாம் மாணவர்களின் பாடசாலை நேரம் தவிர்ந்த பெற்றோர்களுடன் கழிக்கும் நேரங்களைப் பார்ப்போம், எனது பாடசாலை ஆரம்பப் பருவ வயதில் மஹரிபுடைய தொழுகையைத் தொடர்ந்து இஷாவுடைய அதான் வரை ஒவ்வொரு வீடுகளிலும் அல் குர்ஆன் ஓதும் நாதம் வீதிகள் வரை ஒலிக்கும், ஆனால் இப்போதைய நிலை என்ன? ஒவ்வொரு வீடுகளிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் நாடகங்களின் சத்தம் அதானின் சத்தத்தையே மிஞ்சுமளவு சத்தமாய் வீதி வரை கேட்கிறது. இந்தத் தொடர் நாடகங்களில் என்னதான் காட்டப்படுகிறது, காதலும், போதைப் பாவனைகளும், வன்கருத்துக்களும், கள்ளவுறவுகளுமே காட்டப்படுகின்றன, இதனை தாய்,மகன், தந்தை,மகள் பேதங்களின்றி எந்தவிதக் கூச்சங்களுமின்றி வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கின்றனர். பின் அந்நாடகக் கதைகளே பகற்பொழுதனைத்தும் அவர்களின் பேசு பொருளாகக் காணப்படுகிறது, திரைப்படங்கள் பலவும் ஒட்டுமொத்தக் குடும்பத்தினதும் முக்கிய போழுதுபோக்கம்சமாய்க் காணப்படுகிறது. தம் வீடுகளில் எந்நேரமும் பார்க்கின்ற, கேட்கின்ற விடயங்களில் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் அவற்றில் அனுபவம் தேட முனைகின்றனர். அதற்கவர்களுக்கு இளவயதிலேயே பெற்றோரால் வாங்கிக்கொடுக்கப்பட்ட கைத்தொலைபேசியும், கவனிக்க யாருமற்ற தனிறையில் கொடுக்கப்பட்ட இணைய இணைப்புக் கொண்ட கணனிகளும் பெரிதும் உதவுகின்றன.

     தாம் விரும்புகின்ற இந்தக் கீழ்த்தரமான விடையங்களில் அனுபவங்களை பாடசாலையில், பகுதி நேர வகுப்புக்களிலும், ஏன் சொந்த வீடுகளிலும் ஏற்படுத்திக்கொள்ள முனைகின்றனர் என்ற உண்மையை நாம் மிக வெட்கத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். தவறு நடந்தபின் குய்யோ முறையோ என ஓலமிடும் பெற்றோர் தம் மகன் கணனியில் என்ன பார்க்கிறான்?, இணையத்தில் என்னென்ன இணையத் தளங்களில் உலவுகிறான்?, தம் மகள் இரவுமுழுதும் கைத்தொலைபேசியில் யாருடன் குசு குசுக்கிறாள்?, இருபத்துநான்கு மணிநேரமும் வரும் குறுஞ்செய்திகள் (SMS) யாரிடமிருந்து வருகின்றன? என்பவற்றைக் கவனியாது தம் பிள்ளைகளைப் போகின்ற போக்கில் விட்டது எல்லாம் மகா தவறில்லையா?

     இன்னுமோர் வர்க்கப் பெற்றோர் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை மட்டும் பார்க்கின்றனரே தவிர ஆன்மீக, சமய ஒழுக்க விருத்தியை இச்சளவும் கவனத்தில் கொள்வதில்லை. இதனால் சில மாணவர்கள் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற்றால் மட்டும் போதும் மற்றப்படி என்ன செய்தாலும், எப்படி நடந்து கொண்டாலும் பிரச்சினை இல்லை எண்ணத்தில் நடந்து கொள்கின்றனர். இதனை சில பெற்றோர் ஆதரவாயிருப்பதும் மிகக் கொடுமை. இதனாலும் மாணவர்கள் தவறிழைக்க அச்சப்படா நிலை தோன்றியுள்ளது. நமது ஊரைப் பொறுத்தமட்டில் எத்தனையோ இஸ்லாமிய இயக்கங்களும், மாணவர் அமைப்புக்களும் இருக்கின்றன. அவை மாணவர்களைக் குறிக்கோளாய்க் கொண்டு எத்தனையோ அறிவுசார், மத ஒழுக்க விழுமியங்கள் சார்ந்த பயிற்சி வகுப்புக்களையும் நடத்துகின்றன, ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய சில மாணவர்கள் மட்டுமே இவற்றில் கலந்துகொள்கின்றனர். இவ்வாறான வகுப்புக்களுக்குச் செல்வதால் படிப்புப் பாழாய்ப்போகும் என சில பெற்றோரே மாணவர்களைத் தடுப்பது மிகவும் வருந்தக்கூடிய விடயமாகும்.

     இவ்வளவு அடிப்படைப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு பாடசாலையை ஆண், பெண் பிரித்துவிட்டால் மாணவர்களின் எல்லாத்தவறுகளையும் ஒளித்து விடலாம் என நினைப்பது பகற்கனவில்லையா? பாடசாலையைப் பிரித்துவிட்டால் மாத்திரம் மாணவர்கள் முற்றுமுழுதாய்த் திருந்திவிடுவார்களா? பாடசாலைகள் பிரிந்திருந்தாலும், சேர்ந்திருந்தாலும் ஒழுக்கத்துடன், கட்டுப்பாட்டுடன், வாழக் கற்பிக்க நாம் முனையத்தேவை இல்லையா? பல்லாயிரம் கட்டுப்பாடுகள் நிறைந்த பாடசாலையில் மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் பிரித்து வைத்திருந்தால் பின்னர் நாம் எதிர்நோக்கும் பூதாகரப் பிரச்சனை என்னதெரியுமா? உயர் தரப் பரீட்சையின் பின் பல்கலைக்கழக நுழைவு, தனிப்பட்ட இடத்தில் பலகட்டுப்பாடுகளுடன் அடைக்கப்பட்ட ஒரு சமூகமாக இருந்த மாணவர்கள் பல்கலைக்கழகமெனும் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமற்ற ஒரு கலப்புச் சமூகத்திற்குள் நுழையும் போது, 'காய்ந்த மாடு கம்பன் கொல்லைக்குள் பாய்வதால்' ஏற்படும் விளைவுகள் ஏற்படாதா? இவ்வாறானதொரு நிகழ்வு நடக்காமல் தடுக்க வேண்டாமா? எனவே எந்தச் சூழலிலும் கட்டுப்பாடாகவும், ஒழுக்கத்துடனும் வாழ அவர்களைத் தயார் படுத்த வேண்டுமே, எனவே இதற்கமைய எம் மாணவர் சமூகத்தைப் பயிற்றுவிக்க ஆசிரியர், பெற்றோர், புத்தி ஜீவிகள் எந்தவகையில் முனையப்போகிறோம்.

                                                                                          பகுதி - 03 >>>>

மருதமுனைப் பாடசாலைகளை ஆண், பெண் பாடசாலைகளாகப் பிரித்தல்.

தலைப்பு சம்பந்தமான என் கருத்துப் பதிவு.

பகுதி - 03

     சரி, எமது சமய அடிப்படையில் ஆண், பெண் கலப்பு தவறென்ற அடிப்படையில் பாடசாலைகள் தனிப்பால் பாடசாலைகளாகப் பிரிக்கப்படவே வேண்டும் என எடுத்துக்கொள்வோம், எந்த அடிப்படையில் பிரித்தல்?, எந்தெந்தப் பாடசாலைகளைப் பிரித்தல்? என்பதில் பாரிய பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன. எமதூரில் காணப்படுகின்ற சிரேஸ்ட பாடசாலைகளை மட்டுமே பிரித்தல் வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றன.

     இதில் உள்ளகப் பிரிப்பு என்பது ஒரு முறையாகும், அதாவது ஒவ்வொரு பாடசாலைகளையும் ஆண், பெண் எனத் தனித்தனியே இரு பிருவுகளாக்கி ஒரே பாடசாலைப் பெயரின் கீழ் ஆண் பிரிவு, பெண் பிரிவு எனப்பிரித்தல். மேற்கூறிய இவ் உள்ளகப் பிரிப்பிலே பல நன்மைகள் காணப்படுகின்றன. அதாவது பாடாசலைகள் அதே நாமங்களில்க் காணப்படும், விரும்பிய மாணவர்கள் விரும்பிய பாடசாலைகளில் கல்வி கற்க முடியும், பாடசாலைகளுக்கிடையில் கல்வி, மற்றும் விளையாட்டுப் போன்றவற்றில் ஆரோக்கியமான போட்டி காணப்படும், மாணவர்களின் பல அசெளகரியங்கள் அதாவது அதிக தூரம், போக்குவரத்துச் சிரமம் போன்றவை தவிர்க்கப்படல் போன்ற நன்மைகளைக் கூறலாம்.

     இப்பிரித்தல் முறைமையில் சில குறைபாடுகளும் காணப்படத்தான் செய்கின்றன. அதாவது ஒரே பாடசாலை இரு பிரிவுகளாகப் படும் போது பாரிய இடப்பிரச்சினை மற்றும் வளங்களின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். ஆனால் உரிய அதிகாரிகளின் உதவியுடன் இக்குறைகள் தீர்க்கப்பட்டு ஆண், பெண் இரு பிரிவுகளுக்கு சமமான, நிறைவான வளங்களை வளங்கக்கூடியதாய் இருக்குமெனில் இப்பிரிப்பு முறை ஒரு சிறந்த பிரித்தல் முறையாகக் காணப்படுகிறது.

     அடுத்த பிரிப்பு முறையானது முற்றிலும் வேறான பிரிப்பு. அதாவது எமது ஊரில் காணப்படுகின்ற பிரபல்யப் பாடசாலைகள் இரண்டையும் ஒன்றை ஆண் பாடசாலையாகவும், மற்றயதை பெண் பாடசாலையாகவும் பிரித்தல். இது ஒரு முறை மற்றையமுறை பிரதான வீதியை அண்மித்துக் காணப்படுகின்ற பாடசாலைகளான அல் -மனார் மத்திய கல்லூரி, சம்ஸ் மத்திய கல்லூரி இரண்டையும் ஆண்கள் பாடசாலையாகவும், ஊருக்கு மத்தியில் காணப்படுகின்ற பாடசாலைகளான அல்-ஹம்றா மஹா வித்தியாலயம், புலவர்மணி சரிபுதீன் வித்தியாலயம் இரண்டையும் பெண்கள் பாடசாலையாகவும் பிரிக்கின்ற முறைகள்.

      இந்த முற்றிலும் வேறான பிரிப்பினை எடுத்துக் கொள்வோமேயெனில், இதில் காணப்படுகின்ற நன்மைகளாவன, பிரிக்கப்படுகின்ற ஆண், பெண் இருபாடசாலைகளுக்கும் போதுமான அளவு இட வசதி, மற்றய வசதிகளும் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் இப்பிரித்தல் முறைமையில் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

     அதாவது பிரபல்யப் பாடசாலைகள் இரண்டையும் ஆண், பெண் பாடசாலைகள் என இரண்டாகப் பிரிக்கும் போது எமது கிராமத்தின் கரையோரத்தில் வசிக்கின்ற மாணவர்களுக்கு அதிலும் பெண் மாணவிகளுக்கு பெரிய போக்குவரத்துப் பிரச்சினையைக் கொண்டுவரும். பெரிய நீலாவணைக் கரையோரத்தைச் சேர்ந்த மாணவி ஸம்ஸ் மத்திய கல்லூரிக்கு நடந்து வருவதென்பது மிகுந்த சிரமமான விடயம், பாடசாலை செல்ல ஒவ்வொரு நாளும் தந்தையையோ, சகோதரர்களையோ எதிர்பார்த்திருக்கவும் முடியாது. ஆனால் அல்-மானார் கல்லூரியை ஆண் பாடசாலையாக மாற்றும் அதே வேளை புலவர்மணி சரிபுத்தீன் வித்தியாலயத்தை பெண் பாடசாலையாகவும், ஸம்ஸ் கல்லூரியை பெண் பாடசாலையாக மாற்றும் அதேவேளை அல்-ஹம்றா வித்தியாலயத்தை ஆண் பாடசாலையாகவும் மாற்றுவதினால், இந்த அதிக தூரம் போக்குவரத்து போன்ற பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம்.

     இதில் கூறப்பட்டிருக்கின்ற இரண்டாவது பிரிப்பு முறையான பிரதான வீதியை அண்மித்த அல்-மானார், ஸம்ஸ் இரு பாடசாலைகளையும் ஆண் பாடசாலைகளாகவும், சரிபுதீன் வித்தியாலயம், அல்-ஹம்றா வித்தியாலயம் இரண்டையும் பெண் பாடசாலைகளாகவும் மாற்றும் முறை இதில் போக்குவரத்து, அதிக தூரம் போன்ற பிரச்சினைகள் எதுவும் காணப்படாது.

     இருந்தாலும் ஆண் பாடசாலைகளுக்குக் கிடைக்கின்றளவு பெளதிக வளங்கள் பெண் பாடசாலைகளுக்குக் கிடைக்காதென்றொரு குறை காணப்படுகின்றது. முற்றாகப் பிரிக்கின்ற இவ் இரண்டு முறைகளிலும் காணப்படுகின்ற மிகப் பெரிய குறை பாடசலைகளுக்கிடையான கற்றலில் உள்ள ஆரோக்கியமான போட்டி இல்லாது போகும் என்பதாகும்.

     தென் தெரு, வட தெருப் போட்டி காணப்பட்ட காலம் முதல் இன்றுவரை அல்-மானார், ஸம்ஸ்  இருகல்லூரிகளுக்கும் இடையே கற்றலில் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவுகின்றமை எல்லோரும் அறிந்ததே, இப்போட்டியானது இப்பிரித்தல் முறைமையால் அற்றுப்போகும் என்பதே மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். ஆண், பெண் போட்டி தோன்றலாம் என எதிர்பார்த்தாலும் இருப்பதை இழந்துவிட்டு புதிதாகத் தோன்றும் என்பதை நம்பியிருக்கவும் முடியாது, அதுவுமில்லாமல் பாடசாலை உள்ளக மட்டத்தில் கூட இதுவரை ஆண், பெண் மாணவர்களுக்கிடையில் ஆரோக்கியமான போட்டி இருந்ததில்லை என்பதைக் கூறிக்கொள்ள வேண்டும். எனவே எம்மிடம் இருக்கின்ற கற்றலின் ஆரோக்கியமான போட்டியை நாம் ஒருக்காலும் இழந்துவிடக்கூடாது.

     இங்கே கூறப்பட்டவைகள் அனைத்தும் என் சொந்தக் கருத்துக்கள் மட்டுமே. பாடசாலைப் பிரித்தல் சம்பந்தமாய் முயல்பவர்கள் என்னைவிட அறிவு ஜீவுகளும், புத்திசாலிகளும் என்பதை நானறிவேன். எனவே எமது மாணவர் சமூகத்திற்கும், எமதூரின் கல்விக்கும் எந்தவகையிலும் பாதிப்புக்கள் வராதவகையில் முடிவெடுப்பார்கள் என்பதை பூரணமாய் நம்பி சிறந்த முடிவிற்காய்க் காத்திருக்கிறேன்.

Tuesday, January 1, 2013

உள்நாட்டு  அலுவல்கள் அமைச்சின் புது வருட நிகழ்வு : ஒரு பார்வை.


      2013.01.01 செவ்வாய்க் கிழமை அரச நிர்வாக உள்நாட்டு  அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற புது வருட நிகழ்வு சம்பந்தமான பதிவு இது. நிகழ்விலே நடைபெற்ற சில வேண்டத்தகா அதிகார பிரயோகங்களால் வந்த குறைகளின் பட்டியலே பதியப் படுகிறது. நிகழ்வில் நிறைகளை விடக் குறைகளே அதிகமாகக் காணப்பட்டது. சரியாக ஒன்பது மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்வு பத்து மணிக்கே ஆரம்பிக்கப் பட்டது. விழாவில் ஆசி கூற வந்த அனைத்து மத குருக்களில் பெளத்த மதகுருக்கள் இருவர் தாமதம் காரணமாக நிகழ்வு ஆரம்பிக்க முதலே சென்று விட்டனர்.

      ஒரு வழியாக நிகழ்வு காலை பத்து மணியளவில் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. அமைச்சர் கொடியினை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் நெய்விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது, அதன் பின் மும்மொழிகளிலும் உறுதியுரை கூறப்பட்டன. அதனைத் தொடர்ந்து சர்வ மத குருக்களால் ஆசியுரைகள் கூறப்பட்டன. முதலில் பெளத்த மதகுருவினால் பிரார்த்தனையும் ஆசியுரையும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் கிறிஸ்தவ மத குருவினால் பிரார்த்தனை மற்றும் ஆசியுரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முஸ்லிம்  மதகுரு, ஆனால் இந்து மதத்தைச் சார்ந்த எவரும் சமூகமளித்திருக்கவில்லை. அத்துடன் மத நிகழ்வுகள் நிறைவு பெற்று அமைச்சின் செயலாளர், அமைச்சர், மேலதிக செயலாளர்கள் மற்றும் சிலரால் உரைகள் நிகழ்த்தப்பட்டன. அந்த வேளை நிகழ்வின் இடைப்பொழுதிலே இந்து சமய மதகுரு வருகைதந்தார், அப்பொழுது நேரம் 11.30. எனவே அவரால் உரயாற்றவோ ஆசியுரை கூறவோ முடியாத நிலையேற்பட்டு வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றுவிட்டார். அதன் பின் சிற்றுண்டியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.

     இங்கு சில நிகழ்வுகள் சிலரின் அதிகாரப் பிரயோகத்தினால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதைக்  காணக்கூடியதாக இருந்தது. நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களினால் சரியான முறையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் படாமையே தாமதத்திற்குக் காரணம். அடுத்து மதகுருக்களுக்கு முன்னமே அறிவுறுத்தல் கொடுத்தல், அவர்களை வாகனங்களை அனுப்பி அழைத்து வரல் என்பனவும் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் கடமையாகும்  அவர்கள் தவறியிருப்பது அல்லது வேண்டுமென்றே ஒதுங்கியிருப்பது மிகத்தெளிவாய்த் தெரிகிறது. இந்து சமய மதகுருவிற்கு வாகனம் பதினொரு மணிக்கே அனுப்பப்பட்டுள்ளது, இது இந்து சமய மதகுருவினை வேண்டுமென்றே தவிர்க்கப் பட்டதாகத் தோன்றுகிறது. அதற்கு இன்னுமோர் காரணம் உரைகள் அனைத்தும் சிங்கள மொழியில் நிகழ்த்தப் பட்ட போதிலும், இஸ்லாம் சமய மதகுரு சிங்கள மொழி தெரியாத ஒருவரை அழைத்து வந்திருந்தனர், அவரால் சிங்களத்தில் உரையாற்ற முடியாமலும், தமிழ் மொழி தெரியாத ஒரு பெருங்கூட்டத்தில் தமிழ் மொழியில் உரையாற்றுவது அவ்வளவு உசிதம் இல்லை என்பதால் அவர் வாழ்த்து கூறிவிட்டு எதுவுமே உரையாற்றாமல் அமர்ந்து விட்டார்.

     இவ்வளவு காலமும் இல்லாமல் இவ்வருடம் மட்டும் இந்தப் பிரச்சினை ஏற்படக் காரணம் என்ன என ஆராய்ந்து பார்த்ததில் முன்பெல்லாம் ஒவ்வொரு சமய மதகுருக்களையும் அழைத்து வரும் பொறுப்பு அவ்வவ் மதங்களைச் சார்ந்த அலுவலகர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது, ஆனால் இவ்வருடம் அனைத்து சமய மதகுருக்களையும் அழைத்து வரும் பொறுப்பை ஒரு உயர் அலுவலகர் தனது அதிகாரத்தைப் பிரயோகித்து ஒரு சிங்கள அலுவலகருக்குப் பெற்றுக்கொடுத்தமையும், அவ் அலுவலகர் வேண்டுமென்றே பிறமதங்களைப் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. இது பல்லின மதத்தினர் கடமை புரியும் இவ் அமைச்சில் மத ரீதியிலான பிளவுகளை வேண்டுமென்றே தூண்டுவதாக அமைகிறது, எனவே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இதனைக் கருத்திற் கொண்டு வருங்காலங்களில் இவ்வாறான தவறுகள் நிகழாதிருக்க ஆவன செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறேன்.