Wednesday, December 26, 2012


உலகம் அழிந்தது.........


(பகுதி - 1)
     அன்று 21.12.12 இரவு பதினொன்றும் தாண்டிய பின்னிரவு நேரம் என்றுமில்லாத அமைதி எங்கும். திடீரென வானத்தில் இருந்து நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து விழத்துவங்கின. கொஞ்சம் நேரம் செல்லச்  செல்லச் நட்சத்திரங்கள் மழை போல் பூமியை நோக்கி விழ ஆரம்பித்தன. நேரம்  போகப் போக வானம் துண்டு துண்டுகளாக உடைந்து பூமியை நோக்கி விழத்துவங்குகின்றது. முட்டக்குடித்தவன் வாந்தி எடுப்பதைப் போல் பூமி இத்தனை காலமும் தன்னுள் தேக்கி வைத்திருந்த அனைத்தையும் அள்ளி வெளியே எறியத்துவங்க மனிதர்கள் 'மாயனை' முழுவதுமாய் நம்பத்துவங்கிவிட்டனர்.

     பெற்றவள் தன் பிள்ளையையோ, பிள்ளைகள் பெற்றவர்களை கவனிக்கப்  பொழுதில்லாமல் திருவிழாக் கூட்டத்தில் தொலைந்த குழந்தைகளைப் போல் பிதற்றிக்கொண்டும், ஓநாய் புகுந்த ஆட்டு மந்தைகள் போல் அங்கொருவர் இங்கொருவராய் ஏன் ஓடுகிறோம் என்றே தெரியாமல் ஓடிக்கொண்டும் முட்டிமோதிக் கொண்டுமிருக்க நான் முற்றும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டேன்.

     என்னதான் நடக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளத் துவங்குமுன்னமே பூமி பிளக்கவாரம்பித்து அதன் மேல் நடப்பட்டிருந்த கட்டிடங்களை விழுங்கிக்கொண்டு தன்னுள்ளே புதைந்துபோயிருந்த கற்களையும் எரிமலைக் குழம்பையும் துப்பத்துவங்கியிருந்தது.

                                                                                                              (பகுதி - 2) >>>

உலகம் அழிந்தது.........


(பகுதி - 2)
     கடல் மிகப்பாரிய சத்தத்துடன் ஆங்கரித்துக்கொண்டிருந்தது. மீண்டும் ஒரு சுனாமியோ அல்லது இதுதான் இறுதியோ என்ற சந்தேகம் என்னையும் ஆட்கொள்ளத்துவங்கியது. மொத்தக் கூரையும் இடிந்து விழுந்தாற்போல் எதுவுமில்லாமையாய் பூமிக்கு மேல், எதுவுமில்லை என்றால் என்ன என்பதை உண்மையில் நான் உணர்ந்த தருணமது.

     பெரும் பெரும் மலைகளும் கற்பாறைகளும் பஞ்சுக் கூட்டங்களைப்போல் பறந்தவண்ணம் இருக்கின்றன. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டதைப் போல் திரும்பும் பக்கங்களிலெல்லாம் அழிவு மட்டுமே தென்பட்டுகிறது, எனைச் சுற்றிலுமே பாரிய சத்தங்கள், எனைச் சுற்றிலும் எனும் போதுதான் அந்த உண்மை என்னைச் சுட்டது, ஆம் என்னைச் சுற்றிலும் யாருமே இல்லை இந்த உலகத்தில். நான் மட்டுமே, நானே நான் மட்டும்.
     
     பூமி ஒளி வழங்கும் உதவுகோள்கள் எதுவுமின்றி இருண்டுவிட்டது. என்னைச் சுற்றிலும் இருந்த மனிதகுல மாணிக்கங்களுக்கு என்னதான் நடந்தது என்பது உணர முடியா  ஒன்றாய் இருந்தது, சரி அதை விட்டு எனக்கு என்னதான் நடக்கப் போகிறது என்பதை நினைக்கத் தலைப்பட்டேன்.

                                                                                                               (பகுதி - 3) >>>>

உலகம் அழிந்தது..........


(பகுதி - 3) 
     மற்றவர்கள் யாருமே இல்லாத நிலையில் தனியனான முடிவெடுப்பதெற்குத்  தலைப்பட்ட நான் ஓடித்தப்பவோ, ஒழிந்துகொள்ளவோ முடியாதென்பதை உணர்ந்துகொண்டேன். பூமிப்பரப்பு பாரிய சத்தத்துடன் சுக்கல் சுக்கலாக வெடித்துச் சிதறுகின்றது. இறுதியாய் ஒரேயொரு துண்டுப் பூமி என் காலடிகளில் மட்டும் எஞ்சுகிறது.

     என்னை நினைக்க எனக்கே பரிதபமாய் இருந்த என் வாழ்க்கையின் கடைசி, என் வாழ்க்கையின் என்பதை விட இந்த உலகின்  இறுதி வினாடிகள் இதோ என் கண்முன்னால் என் கால்களுக்குக் கீழே எஞ்சியிருந்த பூமியின் இறுதி எச்சத்துண்டும் என் கால்களுக்குக் கீழே எங்கேயோ நழுவுகிறது.  அண்டசராசரத்தில் பற்றிக்கொள்ள எதுவுமே இல்லாமல் இறுதியாய் 'ஐயோ...'  பெருங்குரல் எழுப்பிக்கொண்டு திடுக்கிட்டுக் கண்விழித்தேன் நான் என் முன்னிருந்த digitel  கடிகாரம் நேரத்துடன் திகதியையும் சேர்த்துக்காட்டியது, நேரம் அதிகாலை நான்கு மணி, திகதி 22.12.12 புதிய நாள் புலர்ந்து கொண்டிருந்தது. 

                                                       -முற்றும்-
மதங்களுக்கெதிரான சாடல்கள்...

(பகுதி - 1)

     இப்போதைய சமூகத்தில் மதங்களைப் பிடித்திருப்பவர்களைவிட 'மதம் பிடித்திருப்பவர்களே' அதிகமாய்க் காணப்படுகின்றனர். அமைதி, சாந்தி, அஹிம்சை போன்றவற்றைப் போதிப்பதாய்ச் சொல்லிக்கொள்பவர்களே நாஸ்திகனை விட அதிகமாய் நாசம் செய்கிறார்கள் அதுவும் மதங்களின் பெயரால்.

      சிலரின் தனிப்பட்ட விரோதங்களும், குரோதங்களும் மதச்சாயம் பூசப்படுகின்றன. அரசியல் விளையாட்டுக்கு மதங்களைக் கொண்டு ஆட்கள் சேர்க்கப்படுகின்றன. எப்படி வாழ வேண்டும் எனப்போதித்த மதங்களைக் கொண்டே மனிதன் தன் வியாபார இலாபத்தை அடையப்பார்க்கிறான். தன் மனிதத்தை எப்போதோ விற்றுவிட்ட மனிதன் மதப் போதனைகளையும் அடமானம் வைத்துவிட்டான் தம் உலக இலாபங்களுக்காக.

     தற்போதைய சூழலில் மதங்களுக்கிடையிலான போட்டியும் பொறாமையும் அளவிட முடிய அளவில் பெருகி மனிதநேய மாண்புகளையே அடியோடு அழித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தம் மத வளர்ச்சிக்குப் பாடுபடுவதை விட்டு இதர மதங்களை தாழ்த்துவதற்கே மிகப் பிரயத்தனப் பட்டுக்கொண்டிருக்கிறான். அதுவும் தற்போதைய நவீன காலத்தில் இணைய வெளிகளில் பலரும் பலவிதமாய் வாந்தியெடுப்பதைக் காணக்கூடியதாய் இருக்கிறது.

     கருத்துக்கூறலும் விமர்சித்தலும் விலைபோகாச் சரக்காய் மலிந்துவிட்டது இணைய வெளியில். தலையும் தெரியாமல் வாலும் புரியாமலும் உள்ள விடயங்களுக்கெல்லாம் பண்டிதத் தனமாய்க் கருத்துக் கூறுவதில் குறை சொல்ல முடியா ஒரு கூட்டமே அலைகிறது வெளியில்.

     இணையப் பயங்கரவாதம் என்று சொல்லும் அளவிற்கு மதங்களுக்கு எதிரான மிகக் கீழ்த்தரமான விமர்சனங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மதங்களையும் குறிவைத்துத் தாக்குவதற்கு பலவகையான கைங்கரியங்கள் பயன்படுத்தப்படுகிறது. கொள்கைரீதியாக, சமூக நடைமுறை ரீதியாக,  பொருளாதார ரீதியாக என மேற்கொள்ளப் பட்டு வந்த தாக்குதல்கள் தற்பொழுது பகிரங்கமாக மத வணக்கஸ்த் தளங்களைத் தாக்குதல், பகிரங்க எதிர்ப்பு ஊர்வலங்களை மேற்கொள்ளல் போன்ற விபரீத வாடிவங்களுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அனைவரும் கவலைப் படவேண்டிய ஒரு விடயமாகும்.

                                                                                                      பகுதி - 2 >>>>
மதங்களுக்கெதிரான சாடல்கள்...

(பகுதி - 2)


     ஒரு விடயத்தைப் பற்றி விமர்சிப்பதாயின் அப்பொருள் பற்றிய சரியான அறிவும் தெளிவும்  அவசியமானதொன்றாகும். ஆனால் பேசு பொருளான மத விமர்சகர்கள் தாம் விமர்சிக்கும் மதங்களை மட்டுமல்ல தாம் பின்பற்றுகின்ற மதத்தைப் பற்றிக்கூட ஒரு அகரமும் தெரியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள். எந்த மதத்திலும் இன்னுமோர் மதத்தைப் பற்றி கீழ்த்தரமாய் விமர்சிக்கச் சொல்லவில்லை. தன் மதத்தை ஆராதிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு மற்ற மதங்களை இழிவு படுத்த முயல்பவன் செயலால் அவன் மதமே இழிவு படுத்தப்படுகிறது.

     பகுத்தறிவு கொண்டவனாய் மார்தட்டிக்கொண்டு பக்கம் பக்கமாக விமர்சனமும் கருத்துக்களும் எழுதுபவர்களின் எழுத்தாக்கங்களைப் பார்க்கையில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் எவ்வளவழவாக சம்பந்தத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள் என்பதைப் எண்ணி மெச்சத்தோன்றுகிறது. உதாரணமாக குறிப்பிட்ட சிலரின் பிள்ளைப் பேறுகளின் விகிதத்தினைக் கொண்டு அவர்கள் சார்ந்த மதமே அவர்களின் இனவிருத்தியை அதிகரிக்கப் போதித்து சனத்தொகை அதிகரிப்பின் மூலம் நாடு பிடிக்கப் போவதாய் ஒரு குழு பிரச்சாரம் செய்கிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விடயம் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களில் தேவையற்ற கருக்கலைப்புக்கள்  தடையென்றே ["வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக்(கருவிலே கொலை செய்யாதீர்கள், உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உணவளிப்பவன் இறைவனே" எனக்கூறப்பட்டுள்ளனவே தவிர இனப்பெருக்கத்திற்கும் நாடு பிடிப்பதற்கும் சமயரீதியில் என்ன சம்பந்தம் இருப்பதாகக் இவர்கள் கண்டார்கள் என்பது புரியவில்லை. 

     மற்றுமோர் வினோதப் பிரச்சாரம், சந்தையிலே மிக முக்கியமான ஆடை விற்பனை நிலையமொன்று தன் வியாபார விருத்திக்காக சில வகை இனிப்புகளை வழங்கினர். அது அவர்களது வியாபார நுட்பம் ஆனால் சில மேதாவிகள் அதற்கும் மதச்சாயம் பூசி அந்நிறுவன நிருவாகிகள் ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் மாற்று மத இனவிருத்தியைத் தடுப்பதற்காக சில கர்ப்பத்தடை மருந்துகளை அவ் இனிப்புக்களில் கலந்து விநியோகிப்பதாக விசம பிரச்சாரத்தைச்  செய்து மக்கள் மத்தியில் விரோதத்தை வளர்க்கின்றனர். ஆனால் அந்நிறுவனத்தில் அனைத்து மத மக்களும் பொருட்கள் கொள்வனவு செய்கின்றனர் அனைவருக்குமே அவ் இனிப்புக்கள் வழங்கப்படுகின்றன அவர்கள் எந்த மதப் பாகுபாடும் பார்ப்பதில்லை அது சாத்தியமுமற்றதாகும்.

                                                                                                          பகுதி - 03 >>>>
மதங்களுக்கெதிரான சாடல்கள்...

(பகுதி - 3)


     அதேபோல் மதத் தலைவர்களினதும் மதப்போதகர்களினதும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதும், இழிவான கட்டுக்கதைகளைப் பரப்புவதும் சிலருடைய முழுநேரப்பணியாகக் காணப்படுகிறது. அவர்கள் தமது கருத்துக்களைப் பரப்ப அனைத்து வகை வழிமுறைகளையும் அனைத்து ஊடகங்களையும் பரிபூரணமாய்ப் பயன்படுத்துகிறார்கள், இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில் இக் குறிப்பிட்ட சிலரின் விஷமத்தனமான இக் கருத்துப் பரப்பல்களை முழுமையாய் நம்பும் சாதாரண மக்கள் இனத்துவேசத்தை மனதில் அனுமதிக்கத் துவங்குகின்றனர். பாடசாலை செல்லும் பிஞ்சு மனங்களில் கூட மதப்பிரிவினை  என்ற நஞ்சு விதை நயவஞ்சகர்களால் விதைக்கப்படுகின்றன. மேய்ப்பவன் சொல்வதைக்கேட்க நாம் என்ன ஆட்டு மந்தைகளா? நமக்கென சுய புத்தி கிடையாதா? சொல்லப்படும் கருத்துக்களைச் சரி, பிழை பேதம் பிரித்தறிந்து பார்க்கும் அளவிற்குக் கூட நம் அறிவு இல்லையா? எவனோ எதையோ சொன்னால் அதை அப்படியே நம்புமளவிற்கு நாம் என்ன அவ்வளவு முட்டாள்களா?.

     எந்த மதமாய் இருந்தாலும் சரி அதைப்பற்றிப் பேச முதலும், அது பற்றிச் சொல்லப்படும் ஒரு செய்தியை நம்பமுதலும் அம் மதம் சம்பந்தமான அடிப்படைக் கோட்பாடுகளைத் தெளிவாகக் கற்றுக்கொள்ள முனைவோமேயானால் இது போன்ற வதந்திகளை நம்பி நல்ல உறவுகளை முறித்துகொள்வதிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.  ஒவ்வொரு புதுப்புது விடயங்களைக் கற்றுக்கொள்வதில் உள்ள நம் ஆர்வத்தில் சிறிதளவேனும் நம் சூழலில் வாழ்கின்ற பிற மத சகோதரர்களின் வாழ்வியல் நடைமுறைகள், சமய அனுஸ்டானங்கள், மதக்கொள்கைகள் என்பதைப் பற்றி அறிந்து கொள்வதில் இருக்குமேயானால் இது போன்ற வரலாற்றுத்தவறுகள் இனிமேலும் நம் சமூகத்தில் நடைபெறாது பாதுகாத்துக்கொள்ளலாம். 

     எல்லா மதங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்துகொள்ள இவ் இணைய யுகத்தில் வழிகளா இல்லை, நூற்றுக்கணக்கான தேடுதளங்களில் கோடிக்கணக்கான வலைத்தளங்கள் காணப்படுகின்றன. யார் உதவியுமின்றி சுயமாகவே தேடிக்கற்றுக்கொள்ள முடியும்.               

இன்றிலிருந்து தயாராவோமே...